
தமிழோசையில் கடந்த ஐந்தாண்டு காலத்துக்கும் மேலாக பணியாற்றிவரும் நமது ரமேஷ் தமிழோசையிலிருந்து விலகுகிறார்.
ரமேஷ் செய்தி
லண்டனிலிருந்து இயங்கும் அனைத்துலக அபயஸ்தாபனம், அம்னஸ்டி இண்டர்னேஷனல் நிறுவனத்தில் பணிபுரிய அவர் செல்கிறார்.
பிபிசி தமிழோசையில் பணிபுரிந்த கடந்த சில ஆண்டுகளில் அன்றாட நடப்பு செய்தி நிகழ்ச்சிகளில் மட்டுமல்லாமல், அனைவர்க்கும் அறிவியல் நிகழ்ச்சியிலும் தமது முத்திரையைப் பதித்தவர் ரமேஷ்.
அவர் தயாரித்து வழங்கிய விண்ணும் வசப்படும், அணுசக்தி உலகம் அறிவோம் போன்ற அறிவியல் நிகழ்ச்சிகளும், தென்னிந்திய இசையில், மேலைநாட்டு இசைக்கருவிகள் போன்ற கலை கலாச்சார நிகழ்ச்சிகளும் நமது நேயர்களின் வரவேற்பைப் பெற்றிருந்தன.
2005 செப்டம்பர் 29ஆம் தேதியுடன் தமிழோசையில் தனது பணியை முடித்துக்கொள்ளும் ரமேஷ் நேயர்களுக்கான தனது செய்தியில், இலங்கையிலும் இந்தியாவிலும் வேறுபல இடங்களிலும் வாழும் எண்ணற்ற தமிழ் நெஞ்சங்களை தமிழோசை மூலம் எட்டிவந்தது மறக்கமுடியாத அனுபவம் என்று கூறுகிறார்.
தமிழோசை குடும்பத்துடன் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சிகரமானது என்கிறார் அவர்.
விரைவில் இலங்கையில் நிலையான சமாதானம் உருவாக வேண்டும் என்று மனதார விரும்புவதாகவும் அவர் தெரிவிக்கிறார்.
தமிழோசைக் குடும்பத்திலிருந்து விடைபெறும் ரமேஷுக்கு நமது வாழ்த்துக்களை நேயர்கள் சார்பாக தெரிவித்துக்கொள்கிறோம்.