Saturday, September 03, 2005

ஒலி96.8-இன் வண்ணமயமான வரலாறு

வண்ணமயமான வரலாற்றைக் கொண்டது ஒலி. 1936ம் ஆண்டு நான்கு மணி நேரச் சேவையாகத் தொடங்கியது 2001ம் ஆண்டு 24 மணி நேரச் சேவையாக பெளர்ணமி போல் முழுமை பெற்றது. எங்கள் நீண்ட வரலாற்றின் சில முக்கிய மைல்கல்கள் இவை :
1st June 1936
பிரிட்டிஷ் மலாயா ஒலிபரப்பு நிறுவனத்தின் ஒரு பகுதியாக 4 மணி நேர இந்திய ஒலிபரப்பு தொடங்கியது.
1959
நிறுவனத்தின் பெயர் ரேடியோ சிங்கப்பூர் என மாற்றப்பட்டது.
August 1965
ரேடியோ சிங்கப்பூர் நிலையம், ரேடியோ டெலிவிஷன் சிங்கப்பூர் (RTS) ரேடியோ சிங்கப்பூர், எனப் பெயர் மாற்றம் கண்டது. நமது சேவை இந்தியச் சேவை என்றழைக்கப்பட்டது.
1980
RTS சிங்கப்பூர் ஒலிபரப்புக் கழகம (SBC) என்ற ஆணை பெற்ற கழகம் ஆனது.
1982
இந்திய வானொலிச் சேவை ஒலிவழி 4 எனப் பெயர் மாற்றம் கண்டது.
1992
ஒலிவழி 4, ஒலிக்களஞ்சியம் என்ற அழகிய பெயரைப் பெற்றது.
1994
சிங்கப்பூர் ஒலிபரப்புக்கழகம் தனியார் மயமாகி சிங்கப்பூர் வானொலிக் கழகம் என்ற பெயரைப் பெற்றது.
14 April 1997
ஒலிக்களஞ்சியம் என்ற பெயர் சுருங்கி ஒலி 96.8 ஆனது.
May 1998
ஒலியின் முதல் நூல் வெளியீடாக, மீனாட்சி சபாபதி எழுதிய "அறிவோமா நாம்" புத்தகம் வெளியிடப்பட்டது. நம்மவர்களின் பண்பாட்டின் பின்னணியில் உள்ள விஞ்ஞான அடிப்படைய விளக்கி ஈராண்டு தொடர்ந்து ஒலியேறிய அறிவோமா நாம் எனும் நிகழ்ச்சியில் சொல்லப்பட்ட விவரங்களை இந்நூல் கொண்டிருந்தது.
4 Jul 1998
ஒலிக்கு முதல் அறப்பணி விருது, நியூயார்க்கில் வழங்கப்பட்டது. நாராயண மிஷன் முதியோர் இல்லத்திற்கு $250, 000 வெள்ளி திரட்டியத்காக அந்த அங்கீகாரம்.
16 October 2000
ஒலி 96.8 -இன் புதுப்பிக்கப்பட்ட இணையத் தளம் செயல்படத் தொடங்கியது. 60 -க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து மக்கள் கேட்கத் தொடங்கினர்.
21 June 2001
அனைத்துலக அளவில் ஒலிக்கு அங்கீகாரமும் பெருமையும்! சமூக சேவைக்குரிய பெருமைமிகு வோர்ல்ட்மெடல் விருது நியூயார்க் விழாவில் வழங்கப்பட்டது. அது குஜராத் நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டோருக்காக மூன்றே வாரங்களில் $2.6 மில்லியன் வெள்ளியைத் திரட்டிக் கொடுத்த ஒலியின் சாதனை முயற்சிக்காக வழங்கப்பட்டது.
10 August 2001
ஒலி 96.8 -இன் வரலாற்றில் முக்கியமான நாள். 24 மணி நேரமும் இடைவிடாத ஒலிபரப்பு வழங்கத் தொடங்கிய நாள்.
22 Feb 2002
ஒலி96.8 -க்கு குஜராத் நிதி திரட்டு முயற்சிக்காக ப்ரிசம் விருது (மானிடச் சேவையில் பொதுச் சேவை விருது) சிங்கப்பூர் பொதுத் தொடர்புக் கழகத்தால் வழங்கப்பட்டது.
26 May 2002
ஒலியின் இன்னொரு பங்களிப்பு. வழக்கமாகத் தொலைக்காட்சிக் கலைஞர்களை கௌரவிக்கும் பிரதான விழாவில் முதன் முறையாகப் பங்கேற்றது ஒலி. மிகப் பிரபலமான ஒலி படைப்பாளர் விருதை ரஃபி வென்றார். மிகப் பிரபலமான நிகழ்ச்சியாக வரலாற்றில் இன்று தேர்வு பெற்றது.
10-11 August 2002
மேலும் எந்த வானொலியும் செய்யாத முயற்சியில் ஈடுபட்டு வெற்றிகரமாக நிறைவேற்றியது ஒலி; ஒலியின் 24 மணி நேரச் சேவையின் முதலாண்டு நிறைவை முன்னிட்டு 24 மணி நேர இடைவிடா மேடை/கலை நிகழ்ச்சியை செந்தோசாவில் நடத்தியது. சுமார் 7000 பேர் கலந்து கொண்டனர். புதுப்பிக்கப்பட்ட இணையப் பக்கமும் அரங்கேறியது.
9 November 2002
ஒலியின் முதல் தீபாவளி அறநிதி விருந்து நிகழ்ச்சி. வானொலி மூலம் விடுக்கப்பட்ட வேண்டுகோளின் வழி 2 வாரங்களில் $60, 000 வெள்ளி திரட்டப்பட்டது. சிண்டாவின் புரொஜெக்ட் கிவ் திட்டத்திற்கு இத்தொகை வழங்கப்பட்டது. 2003 நவம்பர் முதல் தேதி நடந்த இரண்டாவது விருந்து நிகழ்ச்சியின் வழி $32,000 வெள்ளி திரட்டப்பட்டது.
9 December 2002
ஒலியின் முதல் வர்த்தகக் கூட்டு முயற்சி. ஒலியும் CLAV நிறுவனமும் இணைந்து 180, சிராங்கூன் சாலையில் குறுவட்டு விற்பனை மையத்தைத் தொடங்கின. இசைப் புயல் ஏ ஆர் ரகுமான் திறப்பு விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
30 March 2003
வானொலியின் வெற்றிப் படைப்பான 'வரலாற்றில் இன்று' நூலாக வெளியிடப்பட்டது. முதல் பதிப்பின் 3000 பிரதிகளும் மூன்று வாரங்களில் விற்று முடிந்தன. மறு பதிப்பாக வெளிவந்த மேலும் 3000 நூல்கள் ஒரு மாதத்தில் விற்று முடிந்தன. 400 நேயர்கள் வெளீயீட்டு விழாவில் கலந்து கொண்டனர்.
9-10 August 2003
ஒலியின் 24 மணி நேர சேவை தொடங்கி ஈராண்டு பூர்த்தியானதை முன்னிட்டு மாபெரும் தீவு தழுவிய 24 மணி நேர தமிழ் வாசிப்பு நிகழ்ச்சி, மிக வெற்றிகரமாக நடைபெற்றது.ஒலியும் தேசிய நூலக வாரியமும் இணைந்து மேற்கொண்ட இம்முயற்சியில் பல்வேறு தமிழ் அமைப்புகளும் பங்கேற்றன. 2003 ஆகஸ்ட் 10 -ம் தேதி, ஒலி முதன் முறையாக இரத்த நன்கொடை நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்தது. 212 யூனிட் இரத்தம் சேகரிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சி, மீடியகார்ப் வானொலிகளின் 6 மாத நடவடிக்கைகளில் மிகச் சிறந்ததெனத் தேர்ந்தெடுக்கப்பட்டது.
10 August 2003
உலகத் தமிழ் வரலாற்றில் புது முயற்சியாக 'ஒலியுடன் தமிழில்' எனும் குறுவட்டை வெளியிட்டது ஒலி. இவ்வட்டின் வழி, நேயர்கள் ஒலி படைப்பாளர்களுக்கு நேரடியாக தமிழில் மின் கடிதம் அனுப்ப முடியும். 10,000 வட்டுகள் நேயர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டன.
5 March 2004
ஒலி 96.8 இரண்டாம் முறையாக பிரிசம் விருது பெற்றது. இம்முறை தேசிய நூலக வாரியத்துடன் இணைந்து நாடு முழுவதும் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் நிகழ்ச்சியை 24 மணி நேரம் நடத்தியமைக்காக அந்த விருது கிடைத்தது.
30 Dec 04 – 02 Jan 05
ஒலியும் வசந்தம் சென்ட்ரலும் இணைந்து சுனாமி பேரிடருக்காக கேம்பல் லேனில் நிதி திரட்டு நிகழ்ச்சியை நடத்தின. Lisha மற்றும் வேறு சில இந்திய அமைப்புக்களின் ஆதரவோடு சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கத்திற்காக நான்கே நாட்களில் 426 000 வெள்ளி திரட்டப்பட்டது. மேலும் ஒலியின் வரலாற்றில் முதன்முறையாக ஒரு நிமிடத்திற்கு எங்கள் ஒலி அலை ஓய்ந்தது. ஆம், சுனாமியில் மாண்டோரின் நினைவாக 2004 டிசம்பர் 31ம் தேதி நள்ளிரவில் ஒரு நிமிட மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.
15 January 2005
தைப் பொங்கலை முன்னிட்டு, "முரசு அஞ்சல்" முத்து நெடுமாறனின் தொழில்நுட்ப உதவியுடன், உலகின் முதல் முயற்சியாக தமிழ் குறுஞ்செய்திச் சேவையை அறிமுகம் செய்தது ஒலி. சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய கவிப்பேரரசு வைரமுத்து உலகின் முதல் தமிழ்க் குறுஞ்செய்தியை இவ்வாறு வடித்துத் தந்தார் - “நேற்று வரை மூன்று தமிழ்; இன்று முதல் நான்கு தமிழ். இதோ கைத்தொலைபேசியில் கணினித் தமிழ்."
நன்றி: ஒலி96.8 [http://www.oli.sg/history.htm]