Sunday, January 20, 2019

வானொலி பிறந்த ஊர் / Birth city of Radio

பிபிசி தமிழோசையின் முன்னால் ஆசிரியர் திரு.மணிவண்ணன் அவர்களின் முக நூலில் இருந்து!
————

வானொலி பிறந்த நகர்... 

வேலை விஷயமாக லண்டன் அருகே இருக்கும் செம்ஸ்ஃபோர்ட் நகருக்கு போக நேர்ந்தது. 

சிறிய நகரம்தான். அதற்கு இருக்கும் ஒரே பெருமை, வானொலியைக் கண்டுபிடித்த மார்க்கோனி , இத்தாலியில் இருந்து இந்த நகருக்கு வந்து வானொலிப்பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலையை ஆரம்பித்ததுதான். 

சொந்த நாட்டில் தனது கண்டுபிடிப்பை விற்பனைப் பொருளாக்கத் தேவையான நிதி உதவி கிடைக்காததால், இங்கிலாந்துக்கு வந்து நிதி ஆதரவு பெற்று தொழிற்சாலையை செம்ஸ்போர்டில் தொடங்கியிருக்கிறார், 

1899ல் தொடங்கப்பட்ட இந்த தொழிற்சாலைக்கு the Wireless Telegraph & Signal Company என்று முதலில் பெயர். பின்னர் அது மார்க்கோனி கம்பெனி என்றாகியிருக்கிறது.

சில பரீட்சார்த்த ஒலிபரப்புகளுக்குப் பின், முதல் வெற்றிகரமான, பொது வானொலி ஒலிபரப்பு 1920ல் நடந்திருக்கிறது. 

தன்னுடைய கண்டுபிடிப்புக்கு காப்புரிமை பெற்று பிறகு லண்டன் அருகே உள்ள இந்த நகரில் வானொலி பெட்டிகளை தயாரிக்கவும், கம்பியில்லாத் தந்திக் கருவிகளைத் தயாரிக்கவும் தொழிற்சாலையை தொடங்கியிருக்கிறார் மார்க்கோனி. 

இந்த தொழிற்சாலையின் உற்பத்தி உச்சகட்டத்தில் இருந்த போது உள்ளூருக்கு இது ஒரு பெரும் வரப்பிரசாதமாக விளங்கியதாம். சுமார் 4,500 பேருக்கு இத்தொழிற்சாலையால் வேலை வாய்ப்பு கிடைத்ததாகக் கூறப்படுகிறது. 

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் , இந்த தொழிற்சாலை இருந்த இடத்தை அடுக்குமாடிக் குடியிருப்புக் கட்டிடமாக மாற்றியிருக்கிறார்கள். 
உள்ளூரில் சில வானொலி மற்றும் வரலாற்று ஆர்வலர்கள் இதைத் தடுத்து, இக்கட்டிடத்தை வானொலி வரலாற்று நினைவுச்சின்னமாகப் பராமரிக்க எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. 

இதை ஒரு வரலாற்று சின்னமாக மாற்ற உள்ளூர் கவுண்ட்டி ( உள்ளாட்சி நிறுவனம், County) பெரிய ஆர்வம் காட்டியதாகத் தெரியவில்லை. ஆனால் வானொலி பிறந்த ஊர் என்று பெருமையாகச் சொல்லிக்கொள்கிறார்கள் ! 

நகரின் மையப்பகுதியில் மார்க்கோனி சிலை ஒன்று அவரது நினைவை பறைசாற்றிக்கொண்டிருக்கிறது. 

குடியிருப்புக் கட்டிடமாக மாற்றப்பட்டாலும், இந்த இடத்தின் வரலாற்று முக்கியத்துவத்தை நினைவு கூரும் வண்ணம், பிரிட்டனில் இது போன்ற கட்டிடங்களில் பதிக்கப்படும் நீலத் தகவல் பலகை ( blue plaque) , இந்தக் கட்டிடத்திலும் வைக்கப்பட்டிருப்பது  சற்று ஆறுதல் தரும் விஷயம். 

மேலும் படிக்க:





Inline image

Inline image

Inline image