Thursday, October 17, 2013

சர்வதேச வானொலி சஞ்சிகை பற்றி திரு. அப்துல் ஜப்பார்

B.B.C. யின் சென்னை அலுவலகத்தில் பணியாற்றும் ஜெய்சக்திவேல் ஒரு வானொலி கலைக் களஞ்சியம்
(என்சைகிளோபீடியா) என்றால் அது மிகையல்ல. உலகின் அத்தனை வானொலிகள், குறிப்பாகத் தமிழ்
வானொலிகள் பற்றிய குறிப்புக்களை தன் விரல் நுனியில் வைத்திருக்கிறார்
 
பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கையெழுத்துப் பிரதியாக ஆரம்பிக்கப்பட்டு, பிறகு தட்டச்சு செய்து நட்பு
வட்டத்துக்குள் மட்டும் வினியோகிக்கப்பட்டு  வந்த "சர்வதேச வானொலி" முதன் முறையாக அச்சு வாகனம்
ஏறுகிறது. "தினமலர்" நாளிதழ் நிறுவனரின் பேரன் தினேஷ், கொழும்பு "வீரகேசரி"  நாளிதழின் சென்னை
அலுவலகத்தில் பணிபுரியும் அருண், ஜெய்சக்திவேல் ஆகியோரின் கூட்டு முயற்சி இது
 
இதன் வெளியீட்டு விழாவும், "கரிசல்" திரைப்படக் கழகத்தின் துவக்க விழாவும் திருநெல்வேலி, வண்ணரப்
பேட்டை, அறிவியல் வளாக அரங்கில் 25.4.08 காலை முதல் மாலை வரை முழு நாள் விழாவாக நடைபெற்றது.
 
திரைப்பட இயக்குனர் மாரிமுத்து, குறும்பட இயக்கத்தின் திருநாவுக்கரசு ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.
'விழி-வழித் தொடர்பு' (Visual Communication)  கல்வி பயிலும் மாணவர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து
கொண்டனர். அன்று வானொலியின் பிதாமகன் மார்க்கோனியின் பிறந்த நாளும் கூட.
 
வானொலியின் வரலாறு, வளர்ச்சி, இப்போதைய பயன்பாடுகள், வருங்கால சாத்தியக் கூறுகள், வானொலியில்
குரலை வைத்துக் கொண்டு என்னென்ன ஜகஜ்ஜால வித்தைகள் எல்லாம் செய்யலாம் என்று நாற்பது
நிமிடங்கள் பேசினேன். "ஆக்ராவின் கண்ணீர்" என்ற வானொலி நாடகத்தில் அக்பர் சக்கரவர்த்தியாக நடித்த
இரண்டு காட்சிகள் உச்சம்.
 
உள்ளூர் வானொலிகளில் பணியாற்றும் பல இளஞர்கள் - இளைஞிகள் வந்திருந்தார்கள். "வானொலியில்
இப்படியெல்லாம் விஷயமிருக்கிறது என்பது எங்களுக்குத் தெரியவே தெரியாது. யாரும் சொல்லிய்ம்
தரவில்லை" என்று சொன்னபோது, இப்போதைய வானொலியின் தரம் எனக்குப் புரிந்தது. கேட்க வேதையாக
இருந்தது.
 
அழைபிதழில் என்னை, "உலகில் மூத்த தமிழ் ஒலிபரப்பாளர்" என்று என்னைக் குறிப்பிட்டிருந்தார்கள். அது
எவ்வளவு தூரம் சரி? என்னை விட மூத்தவர்களான பூர்ணம் விஸ்வநாதன், இலங்கையின் முனைவர்
கார்த்திகேசு சிவத்தம்பி, "ரேடியோ மாமா" சரவணமுத்து ஆகியோர் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் யாரும்
இப்போது களத்தில் இல்லை என்பது மட்டுமல்ல, என்னைப்போல் 58 வருட அனுபவம் என்பது யாருக்கும்
இல்லை என்பது என்னையே ஆச்சரியப்பட வைத்த சுவாரஷ்யமான தகவல்.
 
பெண்களில் இலங்கையின் ராஜேஸ்வரி ஷண்முகம், விசாலாக்ஷி ஹமீது (இவர் BH ன் துணைவியாரல்ல)
BBC  ஆனந்து சூர்யபிரகாஷ், லண்டன் 'சன்ரைஸ் வானொலி' யின் யோகா தில்லை நாதன் ஆகியோர் என்
அளவு அனுபவத்தில் நெருங்கி வரக் கூடியவர்கள்
 
ஷோபனா ரவி, சரோஜ் நாராயணசாமி ஆகியோர் அரசில் பணியாற்றியவர்கள் ஆகவே கூடிப்போனால்
அவர்களது அனுபவம் 40 ஆண்டுகளை தாண்டிப்போக வழியில்லை என்றும் கூறப்படுகிறது. BH  அப்துல்
ஹமீதின் அனுபவ வயது 45 ஆண்டுகள்.
 
இந்தத் தகவல்கள் என்னை உற்சாகப் படுத்துவதுடன், முதுமையாக அல்ல, மிக இளமையாக
உணரச் செய்கின்றன
 
நிலை உயரும்போதும் பணிவு கொள்ளும் சாத்தான்குளம் அப்துல் ஜப்பார்

நன்றி: https://groups.google.com/forum/#!forum/muththamiz