Tuesday, October 17, 2006

"புலிகளின் குரல்" வானொலி நிலையம் மீது விமானத்தாக்குதல்

இலங்கையில் கொக்காவில் பகுதியில் இன்று காலை ஒலிபரப்பு நடந்து கொண்டிருந்த வேளையில், "புலிகளின் குரல்" வானொலி நிலையத்தின் மீது இலங்கை அரசின் வான்படையினர் தாக்குதல்களை நடத்தியதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தத் தாக்குதலின் போது அதனுடைய ஒலிபரப்பு கோபுரம் முற்றாக அழிந்து விட்டதாகவும், கலையகங்களும், ஒலிபரப்பு நிலையத்தின் மற்ற சில பகுதிகளும் கனிசமாக சேதமடைந்ததாகவும், புலிகளின் குரலின் பொறுப்பாளர் நா.தமிழன்பன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

இந்தத் தாக்குதல்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டதால்,மாற்று ஒலிபரப்பு ஏறபாடுகள் தயாராக வைக்கப்பட்டிருந்தன எனவும், இந்தத் தாக்குதலினால் ஒலிபரப்பு பாதிக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார். இதே போன்ற தாக்குதல்கள் முன்னர் பல முறை நடந்துள்ளதாகவும், அதனால் அதை எதிர்கொள்ள தயார் நிலையிலேயே இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

தாக்குதல்கள் நடந்த பின்பும், குறிப்பிட்ட அலைவரிசையில் அனைத்து ஒலிபரப்புகளும் திட்டமிட்டபடி ஒலிபரப்பாகியதாகவும், தமிழன்பன் கூறினார். இந்தத் தாக்குதலில் தங்களுடைய நிரந்திர பணியாளர்கள் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்வும், தற்காலிக பணியாளர் ஒருவர் காயமடைந்ததாகவும், மற்றொருவர் தாக்குதல் நடந்த அதிர்ச்சியில் பணியாற்ற இயலாத நிலையில் இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இந்தத் தாக்குதல்கள் குறித்து இலங்கை போர் நிறுத்தக் கண்காணிப்பு குழுவிடம் முறைப்பாடு செய்யப்பட்டு அவர்கள் நேரில் வந்து பார்வையிட்டு விபரங்களை அறிந்து கொண்டு போனதாகவும் அவர் தமிழோசைக்கு வழங்கிய பேட்டியில் கூறினார்.

இதனிடையில் "புலிகளின் குரல்" வானொலி நிலையம் மீது நடத்தப்பட்ட தாக்குதல், அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் ஜெனீவாவில் சமாதான பேச்சுக்கள் ஆரம்பமாகவுள்ள சந்தர்ப்பத்தில் அரசு திட்டமிட்ட வகையில் கருத்துச் சுதந்திரத்தை நசுக்குவதற்காக நடத்தப்பட்ட ஒன்று என்று விடுதலைப் புலிகளின் அரசியல்துறை பொறப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.
================
Source: http://www.bbc.co.uk/tamil/news/story/
2004/05/040528_tamil_currentaffairs.shtml