Monday, November 26, 2012

சீனாவில் தங்க.ஜெய்சக்திவேல் - முதல் நாள்

வணக்கம் நண்பர்களே, இலங்கையிலிருந்து சீனாவிற்கு ஞாயிறு மதியம் வந்து சேர்ந்தேன். விமான நிலையத்திற்கு சீன வானொலி நிலையத்தின் தமிழ் பிரிவில் இருந்து தேன்மொழி அவர்கள் வந்து என்னை வரவேற்று அழைத்துச் சென்றார்கள். நான் இலங்கையில் தங்கியபோது ஏற்பட்ட எனது அனுபவத்தினை விட இந்தப் பயணம் இன்னும் மகிழ்ச்சியாக இருந்தது.

 

நான் கொழும்புவில் இருந்து புறப்பட்ட போது இலங்கை நேரம் அதிகாலை 1.30. இங்கு சீனாவிற்கு சரியாக மதியம் சீன நேரம் 12.30க்கு வந்து சேர்ந்தேன். அன்றைய தினம் விமானம் சற்று முன்னதாக வந்துவிட்டதாக தேன்மொழி கூறினார்கள்.

 

விமான நிலையத்தில் இருந்து சரியாக 45 நிமிடப் பயணத்தில் நான் தங்குமிடத்துக்கு வந்து சேர்ந்தேன். எனது சுற்றுப்பயணம் தொடங்கும் நாளுக்கு ஒரு நாள் முன்னதாகவே வந்துவிட்டபடியால் நான் தமிழ் பிரிவின் சக பணியாளர் திரு.தமிழ்செல்வம் அவர்களுடன் தங்கினேன். அருமையான இரவு உணவினைத் தயார் செய்து கொடுத்தார் தமிழ்செல்வம்.

 

இரவு ஒரு நல்ல தூக்கத்தினை தூங்கினேன். திங்கள் காலை முதல் எனது முறையான சீனச் சுற்றுலா தொடங்கியது.

 

காலை சீன வானொலியின் தமிழ் பிரிவுக்கு சென்றேன். அங்கு கடமையாற்றிக் கொண்டு இருந்த துணைத் தலைவர் வாணி உட்பட அனைவரையும் சந்துத்து எனது வணக்கத்தினை  வாழ்த்துக்கலையும் தமிழக நேயர்களின் சார்பாகவும் எனது மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் சார்பாகவும் தெரிவித்துக் கொண்டேன். அதன் பின் தமிழ் பிரிவின் கலையகங்களைக் காணச் சென்றேன். மிகவும் அருமையாக இருந்தது.

 

குறிப்பாக டாஸ்கன் டெக் மற்றும் ஸ்டுடர் கன்சோல்களைப் பார்த்து வியந்தேன். காரணம் இது போன்ற கன்சோல்கள் ஒலிபதிவின் தரத்தினைக் கூட்டக் கூடியது.

 

அதன் பின் சக பணியாளர்களுக்கு நான் திருநெல்வேலியில் இருந்து வாங்கிச் சென்ற தனிச் சிறப்பான இனிப்பினை வழங்கினேன். அனைவரும் அதனை சுவைத்து பார்த்து மகிழ்ந்தனர்.

 

மதியம் வாணி, சரஸ்வதி மற்றும் தேன்மொழி ஆகியோருடன் இணைந்து மதிய உணவினை  சீன வானொலியின் பிரத்தியேக உணவகத்தில் உண்டோம்.  உணவின் சுவை   மற்றும் மணத்தினை பிரிதொரு பதிவில் நிச்சயம் கூறுவேன்.

 

மதியம் எனது சுற்றுலாவின் முதல் இடமான 'சொர்கக் கோவிலுக்கு' நிறைமதியுடன் நிறைந்த மனதுடன் சென்றேன். சீன வானொலிக்கு சொந்தமான பிரித்தியேக மகிழ்வுந்திலேயே என்னை அழைத்துச் சென்றார்கள். அந்த வாகனத்தின் முன் புறம் சீன வானொலியின் முத்திரையோடு 'சீன வானொலி நிலையம்' என்று எழுதப்பட்டு இருந்தது எனக்கு மிகுந்த மகிழ்வைத் தந்தது. காரணம் இது போன்ற வானொலிக்கு சொந்தமான வாகனங்களில் செல்வது ஒரு தனி மகிழ்ச்சியையும் மரியாதையையும் எனக்குள் ஏற்படுத்தும். அந்த மகிழ்ச்சியை முழுமையாக அனுபவித்தேன்.

 

சீனாவின் மிக முக்கிய இடமான சொர்கக் கோவில் பற்றி விரிவான கட்டுரையை எழுத வேண்டும் எனவே அந்த அனுபவத்தினை வேறு ஒரு பதிவில் உங்களோடு நிச்சயம் பகிர்ந்துகொள்வேன்.

 

அதன் பின் மாலையில் நாங்கள் மற்றும் ஒரு முக்கியமான இடத்திற்கு சென்றோம். கலைநயம் மிக்க அந்த இடம் சீனாவின் கலைக்காக மிகவும் புகழ்பெற்றது. முக்கியமாக உலகின் முக்கிய ஓவியர்களின் பாதம் பட்ட இடம் என்று கூறலாம். ஆம் லியோ லீ சாங் எனும் அந்தப் பகுதி ஒரு பழமையான சீனாவின் கிராமப் பகுதியை நம் கண் முன்னே கொண்டுவந்து நிறுத்துகிறது.

 

அந்தப்பகுதியில் ஓவியம் வரையத் தேவையான தூரிகைகள் மற்றும் அதற்குத் தேவையான வண்ண மைகள் எந்தப்புரம் திரும்பினாலும் விறகப்படுகின்றன. காலத்தால் அழிக்க முடியாத கலைபொக்கிசங்கள் நிறைந்த பகுதியில் எனது கால் தடம் பட்டதில் எனக்கும் மகிழ்ச்சியே. நாளை சீனாவின் முக்கியமான மற்றும் ஒரு நினைவுச் சின்னத்திற்கு செல்ல உள்ளேன். அந்த அனுபவத்தினையும் படிக்க ஆர்வமுடன் இருப்பீர்கள் என நம்புகின்றேன். சந்திப்போம் நாளை. - தங்க.ஜெய்சக்திவேல் (எழுதி முடித நேரம் நள்ளிரவு 12.15)